செய்திகள்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்

தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2019-12-16 07:28 GMT   |   Update On 2019-12-16 07:28 GMT
தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்- வானிலை ஆய்வு மையம்
  • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 3-ந்தேதி வரை பெய்யும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ந்தேதி தொடங்கியது. அடுத்தடுத்து உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தமிழ்நாட்டுக்கு வழக்கமாக 413.4 மி.மீ. மழை கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சராசரியாக இதுவரை 442.9 மி.மீ. மழை கிடைத்து இருக்கிறது. இது இயல்பைவிட 7 சதவீதம் அதிகம்.

சராசரியாக தமிழகத்தில் அதிக மழை பெய்தாலும் மாவட்டம் வாரியாக பார்க்கும் போது 12 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. என்றாலும், நெல்லை, நீலகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 447.7 மி.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது 780.3 மி.மீட்டர் மழை கிடைத்திருக்கிறது. இது 74 சதவீதம் அதிகம். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 467.8 மி.மீட்டர் மழை பெய்வதற்கு பதிலாக 747 மி.மீ. பெய்து இருக்கிறது. இதுபோல் நெல்லை மாவட்டத்தில் இதுவரை கிடைக்க வேண்டிய மழை அளவு 430.6 மி.மீட்டர். ஆனால் 654 மி.மீட்டர் கிடைத்துள்ளது. இது 52 சதவீதம் அதிகமாகும்.

சென்னை, வேலூர், மதுரை, பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்து இருக்கிறது. சென்னையில் இந்த காலகட்டத்தில் 701 மி.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 608.2 மி.மீட்டர் மழையே பெய்து இருக்கிறது. இது 13 சதவீதம் குறைவு.

வேலூரில் இயல்பான மழை அளவு இதுவரை 343.8 மி.மீட்டர் இருக்க வேண்டும். ஆனால் இப்போது 262.3மி.மீட்டர் மழையே பெய்துள்ளது. இது 24 சதவீதம் குறைவாகும். மதுரையில் 390.2 மி.மீட்டருக்கு பதிலாக 306.4 மி.மீட்டர் மழைதான் பெய்துள்ளது. இது 21 சதவீதம் குறைவு. பெரம்பலூரில் 432.2 மி.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 328.5 மி.மீட்டர் தான் பதிவாகி உள்ளது. 24 சதவீதம் குறைவு. புதுச்சேரியில் இந்த கால கட்டத்தில் வழக்கமாக 814.8 மி.மீட்டர் மழை கிடைக்கும். தற்போது 579 மி.மீட்டர் மழைதான் கிடைத்திருக்கிறது. இது 29 சதவீதம் குறைவு.

வருகிற 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை முடிய இன்னும் 15 நாட்கள் உள்ளன. எனவே பல மாவட்டங்களில் மழை இயல்பான அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தரங்கம்பாடியில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News