லைஃப்ஸ்டைல்
அழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..

அழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..

Published On 2020-06-22 05:04 GMT   |   Update On 2020-06-22 05:04 GMT
முகம், கைகள், கால்களில் சரும பராமரிப்புக்கு செலுத்தும் கவனத்தை நிறைய பேர் பின்புறத்தில் இருக்கும் முதுகை பராமரிப்பதற்கு செலுத்துவதில்லை.
முகம், கைகள், கால்களில் சரும பராமரிப்புக்கு செலுத்தும் கவனத்தை நிறைய பேர் பின்புறத்தில் இருக்கும் முதுகை பராமரிப்பதற்கு செலுத்துவதில்லை. முதுகு பகுதியை நன்றாக பராமரித்து வருவது அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம்.

உடலில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக முதுகுதான் அமைந்திருக்கிறது. முகத்தையும், கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்து கொள்பவர்களுக்கு முதுகு பகுதி சட்டென்று நினைவுக்கு வராது. முகத்திற்கு ‘ஸ்க்ரப்’ செய்து இறந்த செல்களை நீக்குவதுபோல முதுகுக்கும் ஸ்க்ரப் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.

முதுகு பகுதியில் கருமை படிந்திருந்தால் எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு சருமத்தை இயற்கையாகவே பிளிச்சிங் செய்யும் தன்மை கொண்டது. பொலிவிழந்து போன சருமத்திற்கு பளபளப்பையும், பிரகாசத்தையும் கொடுக்கும். முதுகு பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

சருமத்திற்கு ஈரப்பதம் எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல் முதுகுக்கும் அவசியம். முதுகு பகுதியை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதற்கு ஈரப்பதம்தான் உதவும். முதுகு பகுதியின் சரும தன்மையை இயற்கையாகவே புதுப்பிக்கவும் உதவும். அங்கு ஈரப்பதம் இல்லாவிட்டால் சரும பராமரிப்பில் சிக்கல் நேரும்.

முதுகுக்கு பொருத்தமான லோஷன் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். அது சரும பராமரிப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குளிக்கும்போது முதுகு பகுதியையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். குளிக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கை கால்களை கழுவுவதுபோல் வாரத்திற்கு மூன்று, நான்கு முறையாவது முதுகை நன்றாக கழுவ வேண்டும்.

நீராவி பயன்படுத்தி சுத்தம் செய்வது சருமத்திற்கும், முதுகுக்கும் சிறந்த சிகிச்சையாக அமையும். மாதத்திற்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ நீராவி பிடிப்பது சரும துளைகளை திறக்க உதவும். சருமத்தில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்களை அழிக்கவும் செய்துவிடும். முகத்திற்கு நீராவி சிகிச்சை மேற்கொள்வது எளிதானது. வீட்டிலேயே எளிதாக நீராவி பிடித்துவிடலாம். முதுகு மற்றும் உடலுக்கும் நீராவி சிகிச்சை மேற்கொள்வது அவசியம். அத்தகைய சிகிச்சை வழங்கும் ஸ்பா, அழகு நிலையத்திற்கு மாதம் ஒருமுறை சென்று வரலாம். அதன் மூலம் முழுஉடலுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
Tags:    

Similar News