ஆன்மிகம்
தேவநாத சுவாமி

தேவநாத சுவாமி கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா: பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2020-12-24 05:43 GMT   |   Update On 2020-12-24 05:43 GMT
தேவநாதசுவாமி கோவலில் நாளை சொக்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்தக்கு அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக,பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றி விழா நடைபெற இருக்கிறது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, பகல்பத்து உற்சவம் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த உற்சவத்தில் பழத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் தேவநாத சுவாமி, தேசிகர் மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளினர். பின்னர் சாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசிசொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, நாளை காலை 2.30 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் தேவநாத சுவாமிக்கு நடைபெற உள்ளது.

பின்னர், காலை 5.30 மணியளவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெறும். பின்னர் சாமி உட்பிரகாரத்தில் உலா நடைபெறும்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் , கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிமனித இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாக தரப்பில் தெரிவித்தனர்.
Tags:    

Similar News