செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளம், அசாமில் நாளை 2-ம் கட்ட தேர்தல்- மம்தா தொகுதியில் பதட்டம்

Published On 2021-03-31 06:17 GMT   |   Update On 2021-03-31 06:17 GMT
மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 39 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கொல்கத்தா:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங் களுக்கு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கும் நிலையில் மேற்குவங்காளம், அசாமில் மட்டும் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் அசாமில் 3 கட்டங் களாகவும், மேற்கு வங்காளத் தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இரு மாநிலங்களிலும் கடந்த 27-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-வதுகட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 39 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நாளை நடத்தப்படுகிறது.


இதில் அசாமில் ஓட்டுப் பதிவு நடைபெறும் பகுதிகள் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள இடங்கள் ஆகும். எனவே அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல மேற்கு வங்காளத்தில் சில பகுதிகளில் கடுமையான பதட்டம் நிலவுகிறது. முதல்-மந்திரி மம்தாபானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் பகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கும் பதட்டம் நிலவுகிறது.

மம்தாவை எதிர்த்து அவருடைய முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அவர் மம்தாவுக்கு கடும் சவாலாக உள்ளார். எனவே பல இடங்களிலும் வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடுதல் படைகளை குவித்துள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் வாகன பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் பரிசோதனை நடைபெறுகிறது.

2-வது கட்ட தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அதன் பிறகு சில இடங்களில் சிறு சிறு மோதல்கள் நடந்தன. அந்த இடங்களில் போலீசார் நிலைமைகளை கட்டுப்படுத்தினர்கள்.

Tags:    

Similar News