உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2022-04-17 09:27 GMT   |   Update On 2022-04-17 09:27 GMT
திருச்சி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திருச்சி:

தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் அதிகமான கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள்  இருந்து அதிகமானோர் சுற்றுலாவாக வருகிறார்கள்.

குறிப்பாக திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், மற்றும் இஸ்லாமிய புகழ் பெற்ற தர்காவான நத்தர்ஷா பள்ளிவாசல், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன.

தற்போது சித்திரை மாதம் என்பதால் திருச்சி மாவட்டத்தில் அனைத்து கோவில்களும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்த திருவிழாக்களில் பங்கேற்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் இதை வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் திருச்சி மாவட்டத்திற்கு அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலாத் துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா பெருந்தொற்றால் கோவில்களில் எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, சுற்றுலா துறையும் முடங்கியது.

இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மேலும் கோடையை கழிக்க கோடைவாசஸ்தலங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது மீண்டும் திருச்சி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் சித்திரை மாதம் என்பதால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் களை கட்ட தொடங்கியுள்ளன. ஸ்ரீரங்கத்தை பொருத்தமட்டில் நாளொன்றுக்கு 2 லட்சம் முதல் 3 இலட்சத்திற்கும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வாடிக்கை.

தற்போது கோடை விடுமுறை தொடங்கி இருப்பதால் பொதுமக்களின் வருகையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கூடுதலாகி இருக்கிறது. இதேபோல் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோவில், திருவானைக்காவல், சமயபுரம், மலைக்கோட்டை கோவில்களிலும் பொது மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

இது கொரோனாவால் சுருண்டு கிடந்த சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிப்பதாகவும், அனைத்து வகையான வணிகமும் பெருகும் வகையில் அமைந்துள்ளது என்றனர்.
Tags:    

Similar News