செய்திகள்
ஜோ ரூட்

145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்

Published On 2021-02-25 10:48 GMT   |   Update On 2021-02-25 10:48 GMT
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 145 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் 5 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அக்சார் பட்டேல் (6), அஷ்வின் (3) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்னில் சுருண்டது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 57 ரன்னுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹானே மேலும் 7 ரன்கள் எடுத்து ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 66 ரன்னில் ஜேக் லீச்சில் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி ரோகித் சர்மாவை இழக்கும்போது 40.1 ஓவரில் 115 ரன்கள் எடுத்திருந்தது. 42-வது ஓவரை ஜோ ரூட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். 46-வது ஓவரின் முதல் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதேஓவரின் 3-வது பந்தில் அக்சார் பட்டேல் ஆட்டமிழந்தார்.



ஜோ ரூட் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் இந்தியாவின் பேட்டிங் ஆட்டம் கண்டது. அஷ்வின் பொறுமையாக நின்றால் வேலைக்காகாது என அதிரடியாக ஆட முயன்று 9-வது விக்கெட்டாக ஜோ ரூட் பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்தியா 134 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு இஷாந்த் சர்மா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். கடைசி விக்கெட்டாக பும்ரா ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் 6.2 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இங்கிலாந்து 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
Tags:    

Similar News