செய்திகள்
டிடிவி தினகரன்

மீனவர் மறுவாழ்வு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்- டி.டி.வி. தினகரன்

Published On 2020-12-26 06:43 GMT   |   Update On 2020-12-26 06:43 GMT
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் மறுவாழ்வு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி 16 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்பும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான படகுகள், வலைகள் உள்ளிட்ட பொருட்களின் இழப்பும் மீனவர் குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்புகளும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் பெரியளவுக்கு சுனாமி மறு வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும், பல இடங்களில் பணிகள் அரையும் குறையுமாக நிற்பதைக் கடலோரப் பகுதிகளில் பார்க்க முடிகிறது. சுனாமியில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணியும் முழுமையடையாமல் இருப்பதாக மீனவர் அமைப்புகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சுனாமி மறுவாழ்வுத் திட்டங்களின் நிலை குறித்து ஆராய்ந்து குறைகளைக் களைந்திடவும், காலத்திற்கேற்ற புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்திடவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், மீனவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட சிறப்புக்குழுவினைப் பழனிசாமி அரசு அமைத்திட வேண்டும்.

இக்குழுவினருக்கு காலக்கெடு நிர்ணயித்து, தமிழக மீனவர் பகுதிகளின் சீரமைப்புக்கும், மீனவர்களின் புனர்வாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News