செய்திகள்
வைகை அணை

62 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்

Published On 2021-09-06 10:01 GMT   |   Update On 2021-09-06 10:01 GMT
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் முதல்போகம் மற்றும் ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி வினாடிக்கு 1,900 கனஅடி வீதம் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் வைகை அணைக்கான நீர்வரத்து குறைந்தது.

வைகை அணையை பொறுத்த வரையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரே பிரதான நீர்ஆதாரமாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் போதுமான மழை இல்லாத காரணத்தாலும், வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 69 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் தற்போது 62 அடியாக குறைந்துள்ளது. மேலும் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் உருவாகியுள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 62.14 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 970 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,819 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News