செய்திகள்
குழந்தை

வாயோடு வாய் வைத்து ஊதி கொரோனா நோயாளிக்கு பிறந்த குழந்தையை காப்பாற்றிய பெண் டாக்டர்

Published On 2021-04-12 09:59 GMT   |   Update On 2021-04-12 09:59 GMT
கொரோனா நோயாளிக்கு பிறந்த குழந்தை மூச்சுவிட திணறியதையடுத்து, டாக்டர் பிரியங்கா எதைபற்றியும் கவலைப்படாமல் தனது முகக்கவசத்தை கழற்றிவிட்டு அந்த குழந்தையின் வாயில் வாய் வைத்து ஊதி மூச்சுவிட உதவி இருக்கிறார்.
சென்னை:

கொரோனாவின் பிடியில் சிக்கி மீண்டு வந்தவர்கள் அதன் பிறகு எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் ஒரு பெண்மணி, 4 வயது குழந்தைக்கு தாயாக இருப்பவர் கொரோனாவிடம் இருந்து உயிர் பிழைத்தும் தன்னைப்போல் கொரோனாவுடன் போராடிய ஒரு பெண்ணை காப்பாற்ற போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த பெண்ணின் தாயும் ஒரு சராசரி பெண்ணாக இருந்திருந்தால், ‘ஏன்டி உனக்கு இந்த வேலை’ என்றுதான் கடிந்து கொண்டிருப்பாள்.

ஆனால் இதை தாய் ராஜ சுந்தரேஸ்வரி அப்படி சொல்லவில்லை. ‘ கண்ணு நீ நல்லதுதான் செய்திருக்கிறாய்’ என்று பாராட்டியிருக்கிறார்.

பாராட்டிய தாயும் டாக்டர். பாராட்டு பெற்ற மகள் பிரியங்காவும் ஒரு டாக்டர். 31 வயதான டாக்டர் பிரியங்காவுக்கு 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.



கடந்த அக்டோபர் மாதம் பிரியங்காவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டிருக்கிறார்.

அதன் பிறகு பணிக்கு திரும்பி இருக்கிறார். பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் பிரியங்கா ஏற்கனவே கொரோனா தாக்கியதால் மிகுந்த எச்சரிக்கையுடன்தான் பணியாற்றுகிறார். இருந்தாலும் டாக்டர் தொழிலாயிற்றே.

சம்பவத்தன்று நள்ளிரவு 2.30 மணிக்கு பணியில் இருந்த பிரியங்கா போன் மணி ஒலித்ததும் எடுத்து இருக்கிறார். பிரசவ வலியில் ஒரு கொரோனா பாதித்த பெண் துடிக்கிறார் என்றதும் தாமதிக்காமல் சக டாக்டர்களுடன் தயாராகினார்.

அந்த கர்ப்பிணி பெண் கொரோனா நோயாளி மட்டுமல்ல. சர்க்கரை நோயும் உடையவர். எனவே பிரசவம் சவாலானது மட்டுமல்ல. பிரசவம் பார்ப்பவர்களுக்கும் ஆபத்து அதிகம் என்பது தெரிந்ததே.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முகக்கவசம், கவச உடை, கைகளில் உறை எல்லாவற்றையும் அணிந்து கொண்டு எல்லோரும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க தயாரானார்கள்.

ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணுக்கு 3-வதாக அழகான குழந்தை பிறந்தது. குழந்தையும் 4 கிலோ எடையுடன் இருந்தது. இருப்பினும் தாய் கொரோனா பாதித்தவர் என்பதால் குழந்தைக்கும் ஏதாவது சிக்கல் ஏற்படலாம் என்று கருதினார்கள்.

எனவே குழந்தையை தனி வார்டில் வைத்து கண்காணிக்க முடிவு செய்தனர். ஆம்புலன்ஸ் வரவழைத்து குழந்தையை தனி வார்டுக்கு கொண்டு சென்றார்கள். ஆம்புலன்சில் இருந்தபோது குழந்தை மூச்சுவிட திணறியது.

அதைப்பார்த்து அதிர்ந்த டாக்டர் பிரியங்கா, எதைபற்றியும் கவலைப்படாமல் தனது முகக்கவசத்தை கழற்றிவிட்டு அந்த குழந்தையின் வாயில் வாய் வைத்து ஊதி மூச்சுவிடவும், இதயத்துடிப்பை சீர்படுத்த இதய பகுதியை அமுக்கியும் உதவி இருக்கிறார்.

பிரியங்காவின் சமயோசிதமான முடிவால் குழந்தையும் பிழைத்து கொண்டதை தொடர்ந்து பிரியங்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதுபற்றி அவர் கூறும்போது, ஏற்கனவே கொரோனா தாக்கியவர்கள் மீண்டும் கொரோனா நோயாளிகளிடம் தொடர்பில் இருந்தால் எளிதில் தொற்றிக் கொள்ளும் என்பது தெரியும்.

ஆனால் எனது மருத்துவ தொழில் தர்மப்படி போராடும் உயிரை காப்பாற்ற கடைசி வரை போராட வேண்டும். அதைத்தான் நானும் செய்தேன். மருத்துவம் பார்த்து கொண்டிருந்தபோது எனது மகனை நினைத்து கடவுளிடம் பிரார்த்தித்து கொண்டேன் என்றார். இந்த அனுபவத்தைத்தான் அவர் தனது தாயாரிடம் கூறியபோது கண்ணு நீ நல்லதுதான் செய்து இருக்கிறாய் என்று பாராட்டி இருக்கிறார்.

இப்போது தாய் மட்டுமல்ல மொத்த சமுதாயமும், பிரியங்காவை வாழ்த்துகிறது. ‘கண்ணு நீ நல்லது செய்திருக்காய்’ என்று. அனைவரது வாக்குப்படியே பிரியங்கா அவரது குழந்தை உள்பட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ‘நல்லது செய்பவர்களுக்கு நல்லதுதானே நடக்கும்’.

Tags:    

Similar News