செய்திகள்
விபத்து

மகள் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க சென்றபோது பரிதாபம்- மினி பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

Published On 2021-10-21 10:31 GMT   |   Update On 2021-10-21 10:31 GMT
சங்கரன்கோவில் அருகே மகள் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க சென்றபோது மினி பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த ராமலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி மகேஷ்வரி(வயது 45). இவருக்கு மாரீஸ்வரன் என்ற மகனும், கார்த்திகா(20) என்ற மகளும் உள்ளனர்.

பெருமாள்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மாரீஸ்வரன் கூலி வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கார்த்திகாவுக்கு வருகிற 24-ந்தேதி திருமணம் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நேற்று மகேஷ்வரி கழுகுமலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றார். அங்கு ஜவுளி எடுத்துக்கொண்டு மினிபஸ்சில் ஊருக்கு வந்துக்கொண்டிருந்தார். ஊருக்கு அருகே வந்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த மகேஷ்வரி, எழுந்து வாசல் படிக்கட்டின் அருகே வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள சாலை வளைவில் மினிபஸ் வேகமாக திரும்பியதில் மகேஷ்வரி பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குருவிகுளம் போலீசார் மினி பஸ் டிரைவரான கலிங்கப்பட்டியை சேர்ந்த அரங்கநாதன்(22) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News