இந்தியா
குடியரசு தின விழா - டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு

நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம் - டெல்லி ராஜபாதையில் முப்படைகள் அணிவகுப்பு

Published On 2022-01-25 23:46 GMT   |   Update On 2022-01-25 23:46 GMT
தலைநகர் முழுவதும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
புதுடெல்லி:

நாட்டில் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரியும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.  சோதனை சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி, முறைப்படி சோதனை செய்து வருகின்றனர்.  

தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் கணிகாணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மாநகரம் முழுவதும் முக அடையாளம் காணும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.  குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடியரசு தின விழாவையொட்டி முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின விழா காலை பத்தரை மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு நிறைவடைகிறது. 

விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. 

ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறும். மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெற உள்ளன. தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News