செய்திகள்
கர்ப்பிணி

கொரோனா பரிசோதனை முடிவில் முரண்பாடு- சிகிச்சைக்கு வர கர்ப்பிணி மறுத்ததால் பரபரப்பு

Published On 2020-09-24 10:31 GMT   |   Update On 2020-09-24 10:31 GMT
கொரோனா இருப்பதாக கர்ப்பிணியை அதிகாரிகள் சிகிச்சைக்கு அழைத்தனர். ஆனால் பரிசோதனை முடிவில் முரண்பாடு இருப்பதாக கூறி அவர் சிகிச்சைக்கு வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி மாவட்டம் முழுவதும் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தினர். இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா கவனிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முடிவுகள் சிலவற்றில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, பரிசோதனை முடிவில் சிலருக்கு தொற்று இருப்பதாக வந்தாலும், அவர்கள் தனியார் மருத்துவ ஆய்வு கூடத்தில் பரிசோதனை மேற்கொள்ளும்போது தொற்று இல்லை என்று வருவதாக தகவல்கள் வெளியாயின.

இந்த நிலையில் நாகர்கோவில் மணிக்கட்டிப்பொட்டல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிக்கு சுகாதார பணியாளர்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தது. இதனை தொடர்ந்து, கர்ப்பிணியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர்.

இதனால் சந்தேகமடைந்த அவர், தனியார் மருத்துவ ஆய்வு கூடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தது. கொரோனா பரிசோதனை முடிவில் முரண்பாடு ஏற்பட்டதால் கர்ப்பிணி சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு வர மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவரை அழைத்து செல்ல வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News