தமிழ்நாடு
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடர்பான வழக்கு - தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

Published On 2022-01-21 21:37 GMT   |   Update On 2022-01-21 21:37 GMT
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை திருத்தம் தொடர்பாக இத்தனை ஆண்டுகள் கழித்து தொடரப்படும் இந்த வழக்கை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழ்த்தாயை கவுரவிக்கும் விதமாக முழு பாடலையும் பாட வேண்டும் என்றும், இதற்காக அரசு இணையதளம் உள்ளிட்ட ஆவணங்களில் முழு பாடலையும் வெளியிட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்,ஜெ.மோகன்ராஜ் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த' என தொடங்கும் பாடல், தமிழ்நாட்டில் அரசு, தனியார் நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக பாடப்படுகிறது. ஆனால் இதில் பல வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சுந்தரனார் எழுதிய முழு பாடலில், பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல, கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து, செயல்மறந்து வாழ்த்துதுமே என்ற வரி நீக்கப்பட்டுள்ளது என்றும், தமது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர் முத்துக்குமார், தமிழ் மொழி என்பது எங்களது தாய் போல என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேநேரம் பிற மொழிகளை குறைத்து மதிப்பீடு செய்யவோ, வெறுப்பை காட்டவோ கூடாது என்பதற்காக சில வரிகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு நீக்கம் செய்ய அரசுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறையின் பதில் மனுவையும் அவர் தாக்கல் செய்தார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை திருத்தம் செய்து 1972-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து தொடரப்படும் இந்த வழக்கை ஏற்க முடியாது, தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News