செய்திகள்
குமாரசாமி

இடைத்தேர்தல் போட்டியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பின் வாங்காது: குமாரசாமி பேட்டி

Published On 2021-02-26 03:09 GMT   |   Update On 2021-02-26 03:09 GMT
இடைத்தேர்தல் போட்டியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளம்கட்சி பின்வாங்காது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கலபுரகி :

கலபுரகியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் காலியாக உள்ள பசவகல்யாண், மஸ்கி, சிந்தகி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். இதற்கு முன்பு இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடாது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்திருந்தார். இடைத்தோ்தலில் போட்டியிட போதிய பணம் இல்லாத காரணத்தால், அந்த கருத்தை தேவகவுடா கூறி இருந்தார்.

3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியின் நிர்வாகிகள் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஜனதாதளம் (எஸ்) கட்சியின் பலமே தொண்டர்கள் தான். இதனால் 3 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடுவது உறுதி. இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து ஜனதாதளம் (எஸ்) கட்சி பின்வாங்காது.

மத்தியில் சர்வாதிகார ஆட்சியும், கர்நாடகத்தில் ஊழல் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் முடக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு ஊழல் ஆட்சி நடத்துவதாக, அவரது கட்சியின் எம்.எல்.ஏ.வே தெரிவித்துள்ளார். இந்த ஊழல் ஆட்சி குறித்து பா.ஜனதா மேலிடத்திற்கு யத்னால் எம்.எல்.ஏ. 11 பக்கங்களை கொண்ட கடிதத்தை எழுதியதே நல்ல உதாரணமாகும்.

ஜனதாதளம் (எஸ்) கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News