செய்திகள்
கேஎஸ் அழகிரி

தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கியது கண்டனத்திற்குரியது - கேஎஸ் அழகிரி

Published On 2020-02-19 05:08 GMT   |   Update On 2020-02-19 05:08 GMT
மத்திய பட்ஜெட் தமிழைவிட சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கியது கண்டனத்திற்குறியது என காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
நெல்லை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மூன்று ஆண்டுகளை கடந்து 4 ஆண்டு நீடித்து இருப்பதே ஆச்சரியமாக உள்ளது. அ.தி.மு.க. அரசின் சாதனை பாராட்டக்கூடிய அளவிற்கு எதுவும் இல்லை. மத்திய அரசிற்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க., மத்திய அரசிடம் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். ஹட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று பல சலுகையை பெற்று இருக்கலாம். ஆனால், இவர்கள் எந்த சலுகையும் பெறாமல் மத்திய அரசுக்கு அடிமைகள்போல் அவர்கள் சொன்னதை செய்து உள்ளனர். தமிழகத்துக்கு கூடுதல் நிதிஉதவியும் பெற்று தரவில்லை.

தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்பதற்கு அவர்கள் போட்டுள்ள பட்ஜெட்டே சாட்சி. ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை பட்ஜெட் போட்டு உள்ளனர். இதை சரிகட்டுவதற்கு என்ன வழி என்பதை சொல்லவில்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து, இந்த அரசின் தவறுகளை எடுத்துக்கூறி வருகிறோம். ஆட்சியை கலைக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.

குடியுரிமை திருத்தம், தேசிய பதிவேடு சட்டத்தால் அசாமில் 19 லட்சம் பேர் நாடு அற்றவர்களாக உள்ளனர். அவர்கள் ரே‌ஷன்கார்டு, ஆதார் அட்டை எல்லாம் வைத்து இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்களை இப்படி செய்து உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டேன் என்று கூறுகின்ற பிரதமர் மோடி சர்வாதிகாரியாக செயல்படுகிறார். அவருக்கு நாட்டு மக்கள் மீது நம்பிக்கை கிடையாது. அவர்களுடைய திட்டம் என்னவென்றால் இந்துகளுக்கு ஆதரவாகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்த அரசு செயல்படுகிறது என்பதை வடமாநிலங்களில் இருக்கின்ற இந்துகளுக்கு காட்டவேண்டும் என்பது தான். அவர்கள் இதை இந்துமுஸ்லிம் பிரச்சினையாக பார்க்கிறார்கள். நாங்கள் இந்தியாவின் பிரச்சினையாக பார்க்கிறோம்.

காங்கிரஸ் கட்சி டெல்லியில் தோல்வி அடைந்ததை வைத்து தேய்ந்து விட்டது என்று கூறமுடியாது. வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வருமானவரி பிரச்சினையில் ரஜினிக்கு ஒன்று, விஜய்க்கு மற்றொன்று என்று செயல்பட்டது நியாயம் அல்ல. எங்கள் கட்சி நடிகர்கள் யாரையும் நம்பி இல்லை. எங்களுக்கு என்று தனி முகம் உள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். மத்திய பட்ஜெட் தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு அதிகநிதி ஒதுக்கியது கண்டனத்திற்குறியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News