செய்திகள்
பாஜகவில் இணைந்த கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

கோவா காங். எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்- அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு

Published On 2019-07-12 05:39 GMT   |   Update On 2019-07-12 05:39 GMT
கோவாவில் காங்கிரசில் இருந்து விலகிய 10 எம்எல்ஏக்கள் முறைப்படி பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனாஜி:

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் சமீபத்தில் பதவி விலகினர். அவர்கள் அனைவரையும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்  டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் 10 பேரும் முறைப்படி பாஜகவில் இணைந்தனர்.

தற்போது 10 எம்எல்ஏக்கள் இணைந்ததன் மூலம், கோவா சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. எனவே, நீண்ட காலம் கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரசின் பலம் தற்போது 5 ஆக குறைந்துள்ளது.

புதிதாக இணைந்துள்ள எம்எல்ஏக்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடமளிக்க பாஜக தலைமை முடிவு  செய்துள்ளது. இதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்களுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிரித்து தங்களுடன் இணைத்துக்கொண்ட பாஜகவின் செயல் ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால், எம்எல்ஏக்கள் 10 பேரும் விருப்பப்பட்டு, எந்தவித நிபந்தனையும் இன்றி இணைந்ததாக முதல்வர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு மடங்கு எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று பாஜகவில் இணைந்திருப்பதால், அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News