செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பெண் நோயாளி மர்ம மரணம்- அழுகிய நிலையில் உடல் மீட்பு

Published On 2021-06-09 05:53 GMT   |   Update On 2021-06-09 05:55 GMT
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை கண்காணிப்பதற்கு டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் மவுலி. ஐதராபாத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி சுதா.

41 வயதான சுதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மவுலி, தனது மனைவியை சிகிச்சைக்காக சேர்த்தார்.

அரசு ஆஸ்பத்திரியில் டவர் 3-ல், 3-வது மாடியில் அனுமதிக்கப்பட்ட சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அன்று இரவு மவுலி சுதாவுக்கு இரவு உணவை கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் (23-ந் தேதி) காலையில் மனைவியை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது சிகிச்சை பெற்ற வார்டில் சுதாவை காணவில்லை. இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் மவுலி முறையிட்டார்.

பின்னர் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் கடந்த 31-ந் தேதியன்று ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் காணாமல் போன சுதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு மீண்டும் சென்று மவுலி மனைவியை பற்றி தகவல் ஏதும் உண்டா என்று கேட்டார்.

இதையடுத்து போலீசார் மவுலியை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேடினர். சந்தேகத்தின் பேரில் 3-வது டவர் கட்டிடத்தில் 8-வது மாடிக்கு சென்று பார்த்தனர்.

அங்கு அழுகிய நிலையில் சுதா பிணமாகக் கிடந்தார். இதனை பார்த்து மவுலி கதறி அழுதார். இதையடுத்து சுதாவின் உடலை போலீசார் மீட்டனர்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை கண்காணிப்பதற்கு டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.



இதுபோன்ற ஒரு சூழலில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பெண் நோயாளி மாடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வார்டில் இருந்து நோயாளிகள் யாரும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சுதா வெளியில் சென்றதை ஊழியர்கள் எப்படி கவனிக்காமல் விட்டார்கள்? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

ஆஸ்பத்திரி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.

3-வது மாடியில் சிகிச்சை பெற்று வந்த சுதா, எதற்காக 8-வது மாடிக்கு சென்றார் என்பது தெரியவில்லை. இததொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணத்தில் அவர் மாடிக்கு சென்று இருக்கலாம் என்றும் அப்போது அவர் மயங்கி விழுந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

காணாமல் போன சுதாவை உடனடியாக தேடி கண்டுபிடித்து இருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மாயமான கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் முடிவில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News