ஆன்மிகம்
கோவிலில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலை: பக்தர்கள் வேதனை

Published On 2021-09-18 03:55 GMT   |   Update On 2021-09-18 03:55 GMT
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று சிவகாசியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

இதுகுறித்து பக்தர் ஆறுமுகச்சாமி கூறியதாவது:- வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தநிலையில் தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். நிலைமை இப்படி இருக்க மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமைகளில் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதித்து இருப்பதால் புரட்டாசி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பக்தர்களுக்கு ஏதாவது சிறப்பு சலுகை வழங்கி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News