செய்திகள்
பிரியங்கா காந்தி

பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு: பிரதமர் மோடி மீது பிரியங்கா குற்றச்சாட்டு

Published On 2019-11-07 02:09 GMT   |   Update On 2019-11-07 02:09 GMT
இன்போசிஸ், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள விவகாரத்தையும், நாட்டின் பொருளாதார மந்தநிலையையும் முன்வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி :

பிரபல ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தையும், நாட்டின் பொருளாதார மந்தநிலையையும் முன்வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

குறிப்பாக, சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் போது, ‘இந்தியாவில் தற்போது அனைத்தும் சிறப்பாக உள்ளது’ என்று கூறியதை சுட்டிக்காட்டி பிரியங்கா கிண்டல் செய்துள்ளார்.



இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வெளிநாட்டுக்கு சென்று, அனைத்தும் சரியாக இருக்கிறது என்று சொல்வதனால் மட்டும், அனைத்தும் சரியாகி விடாது’ என்று கூறியுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பணிநீக்கம் பற்றிய செய்தியை தனது டுவிட்டரில் பகிர்ந்திருந்த பிரியங்கா, ‘நாட்டின் எந்த பகுதியிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவோ, வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து இருப்பதாகவோ செய்திகள் இல்லை. மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கி உள்ளன. ஆனால் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று கூறுவோர் தற்போது அமைதியாக இருக்கிறார்கள். ஏன்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
Tags:    

Similar News