செய்திகள்
மழை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-05-04 11:15 GMT   |   Update On 2021-05-04 11:15 GMT
நெல்லை டவுன், சந்திப்பு, பாளை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதமாகவே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் பிற்பகலில் ஒரு சில இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்றும் பல்வேறு இடங்களில் திடீர் மழை பெய்தது.

நெல்லை டவுன், சந்திப்பு, பாளை உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மாநகர் மற்றும் புறநகரில் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

ராதாபுரம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் இடி- மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 34 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. மூலக்கரைப்பட்டி, கன்னடியன் பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்திலும் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

ஆலங்குளம், தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

கீழப்பாவூர் மைதானம் அருகில் பழமையான வேப்ப மரம் ஒன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 3 சக்கர ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோ சேதம் அடைந்தது. உடனடியாக சுரண்டை தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 1½ மணி நேரம் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அங்குள்ள நல்லூர் சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஓடிய வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட் டத்தில் கயத்தாறு, கடம்பூர், திருச்செந்தூர், குலசேகரப் பட்டினம், விளாத்திகுளம், சூரன்குடி, வைப்பார் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது.

கயத்தாறில் மாலை 5 மணி முதல் ஒருமணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கயத்தாறு-மதுரை மெயின் ரோடு மற்றும் பிற பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பஸ் நிலையம் முன்பு தேங்கிய மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.

கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பருத்தி, கடலை, மிளகாய் செடி உள்ளிட்டவை பயிரிடுவதற்கு இந்த மழை போதுமானதாக உள்ளதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கயத்தாறில் 36 மில்லி மீட்டரும், விளாத்தி குளத்தில் 22 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில் வானிலை மையம் மழைக்கு இன்றும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருப்பது கூடுதல் மகிழ்ச்சியில் மக்களை ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News