செய்திகள்
தலைமைச் செயலகம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு- சபாநாயகர் அறிவிப்பு

Published On 2020-03-23 07:18 GMT   |   Update On 2020-03-23 07:18 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், சட்டமன்ற கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெற்றால்தான் மக்கள் அச்ச உணர்வின்றி இருப்பார்கள் என்றும், மக்களுக்கு தகவல்கள் சென்றடையும் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
 
அதன்பின்னர் சட்டசபை கூட்டத் தொடர் குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே மார்ச் 31-ம் தேதியே நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அதற்கு முன்னதாகவே கூட்டத்தொடரை நிறைவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம்லீக்  கட்சிகள் அறிவித்தன. அதன்படி அந்த கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர்.

இதற்கிடையே சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைவதாக அவர் அறிவித்தார். 
Tags:    

Similar News