உள்ளூர் செய்திகள்
புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்த காட்சி.

புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா

Published On 2022-05-05 10:24 GMT   |   Update On 2022-05-05 10:24 GMT
புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
புளியங்குடி:

தென்காசி மாவட்டத்தில் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆலயத்தில் சித்திரை பெருந்திருவிழா கோலாகலமாக நடந்தது. 

திருவிழாவில் அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெறுவது இப்பகுதியில் பிரசித்தி பெற்றது. கடந்த 26-ந் தேதி சித்திரை திருவிழாவிற்கு கால் நாட்டு செய்ய ப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் மாலை முளைப்பாரி கும்மிப்பாட்டு நடந்தது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரங்கள் நடந்து வந்தன. 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானகடந்த 3-ந் தேதி காலை குருநாதர் சத்தியம்மா தலைமையில் சாலை விநாயகர் கோவிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பால்குடம், தீர்த்தக்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. 

பின்பு அம்மாவிற்கு பால், தமிழ்நாடு புண்ணிய கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பின்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 504 அக்னிச்சட்டி மற்றும் அக்னி காவடி, அலகு குத்துதல், முத்துப்பட்டி போன்ற நேமிதங்கள் பக்தர்கள் செலுத்தினர். 

அக்னி சட்டி ஊர்வலத்தை குருநாதர் சக்தியம்மா தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு அன்னதானம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு ரத்தக் காளியம்மனுக்கு சாம பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு குருநாதர் சத்தியம்மா சிறப்பு அருள்வாக்கு, படையல் பிரசாதம் வழங்கினார். 

நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு காலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நேமிதத்தை செலுத்தினர். அதனை தொடர்ந்து காலை 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் நடைபெற்று, கோவில் வளாகத்தில் உள்ள தொட்டியில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. 

மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் அன்னாபிஷேகம், அறுசுவை அன்னதானம் நடந்தது. மாலையில் நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News