இஸ்லாம்
இஸ்லாம் வழிபாடு

நற்குணங்களின் முன்மாதிரி...

Published On 2021-12-21 05:45 GMT   |   Update On 2021-12-21 05:45 GMT
திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்டவற்றை நாம் எடுத்துக் கொண்டு நற்குணங்களின் ஆளுமையின் கீழ் நம்மை ஈபடுத்திக் கொண்டால் நம் வாழ்வு செம்மையாகும்.
எதற்கும் அடங்காத அரபு குதிரைகள் போன்று கடிவாளமில்லாமல் வாழ்ந்த மக்களை, தனது நற்குணங்களைக் கொண்டு செம்மைப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

நற்குணங்கள் இல்லாத வாழ்க்கை, நாணல் வகையைச் சார்ந்தவையாகும். நிலையானதாக இருக்காது என்பதால் ஒழுக்கம் சார்ந்தவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறது இஸ்லாம்.

சொல்லும், செயலும் நேர்கோட்டில் பயணிப்பதுதான் ஆளுமையின் அடையாளமாகும். நபியவர்களின் ஆழ்மனதில் நங்கூரமிட்ட நற்குணங்களின் ஆணிவேரின் தாக்கம் அவர்களின் செயல், சொற்களில் தென்பட்டன.

‘இறைதூதுவை போதிக்க அனுப்பப்பட்டது போன்று,‌ நற்குணங்களைப் போதிக்க அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபியின் பிரகடனம் கூறுகிறது.

“நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்கு வதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்பது நபி (ஸல்) மொழியாகும்.

ஓர் இறைக் கொள்கையை மக்களிடம் போதிக்க அனுப்பப்பட்டவர் நபி (ஸல்) அவர்கள். அதற்காகப் பல துன்பங்களை அனுபவித்தார்கள். நபியின் சொல், செயல் கண்டு பலர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றார்கள். ஒரு சிலர் ஏற்க மறுத்தார்கள். ஏகத்துவத்தை வாழ் வியல் நெறியாக ஏற்க மறுக்கும் மக்களைச் சபிக்கும்படி கோரப்பட்ட‌த் தருணத்தில், ‘சபிக்கக் கூடிய பணி என் பணியல்ல’ என்று மறுமொழி தெரிவித்த சம்பவம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.

“அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து, உங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக இருப்பவர்கள் மீது சாபமிடும்படி நபி ஸல் அவர்களிடம் வேண்டப்பட்டது. ‘நான் யாரையும் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை, இரக்கம் காட்டுபவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ என நபி (ஸல்) கூறினார்”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம்)

நற்பண்புகளின் நாயகர் நபி (ஸல்) அவர்கள் என்பதை நாம் திருக்குர்ஆன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தனது திருமறையில் நபியின் நற்குணத்திற்கு அல்லாஹ் சாட்சி பகருகின்றான். இதுவே நபியவர்களின் நற்குணங்களுக்கு முதல் ஆதாரமாக மாறுகிறது.

“மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (திருக்குர்ஆன் 68:4)

தனக்கு ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளுதல், மன்னிப்பது, இவையெல்லாம் இயற்கையாக நபி (ஸல்) அவர்களுக்கு அமைந்த குணங்களில் ஒன்றாகும். தன்னுடைய சொந்த விஷயத்திற்காக யாரையும் பழிவாங்கும் பழக்கம் இல்லாதவராக வாழ்ந்தவர் நபி (ஸல்) அவர்கள்.

“ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்: இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதில் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக யாரையும் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால், அல்லாஹ்வுக்காகப் பழிவாங்குவார்கள். மெதுவாகக் கோபம் வரும். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். கணக்கிட முடியாத அளவு தான தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல் ஏழை எளியோருக்குத் தேவையுடையோருக்குச் செலவு செய்தார்கள்”. (நூல்: ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால், அது மனிதச் சமூகத்திற்கு நலன் பயக்கும். ஒரு விஷயத்தை விட்டு தவிர்த்து கொண்டால் அதுவும் மனித சமூகத்திற்கு பயன்தரும். ஆக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் இரண்டும் மானுட அமைதிக்கு வழிவகுக்கும்.

நபியின் வாழ்வு எப்படி அமைந்தது என்று கேட்கப்பட்டபோது. `அவர்களின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது' என்ற பதில் கிடைத்தது. ஆம், திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்டவற்றை நாம் எடுத்துக் கொண்டு நற்குணங்களின் ஆளுமையின் கீழ் நம்மை ஈபடுத்திக் கொண்டால் நம் வாழ்வு செம்மையாகும்.

ஏ.எச். யாசிர்அரபாத் ஹசனி, லால்பேட்டை.

Tags:    

Similar News