செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவை தோற்கடித்து மும்பை அணி 5-வது வெற்றி

Published On 2019-04-15 14:19 GMT   |   Update On 2019-04-15 20:32 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்து 5-வது வெற்றியை தனதாக்கியது. #IPL2019 #MIvRCB
மும்பை:

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை அணியில் காயம் அடைந்த அல்ஜாரி ஜோசப்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேல், கேப்டன் விராட்கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் பெரேன்டோர்ப் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய விராட்கோலி (8 ரன்) 3-வது ஓவரில் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.



அடுத்து டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். 5-வது ஓவரில் பெரேன்டோர்ப் பந்து வீச்சில் பார்த்தீவ் பட்டேல் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அசத்தினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) பெங்களூரு அணி ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது. அடித்து ஆடிய பார்த்தீவ் பட்டேல் (28 ரன்கள், 20 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 49 ரன்னாக இருந்தது.



இதனை அடுத்து மொயீன் அலி, டிவில்லியர்சுடன் இணைந்தார். இருவரும் பந்தை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டியடித்து வேகமாக ரன் சேர்த்தனர். 13.2 ஓவர்களில் பெங்களூரு அணி 100 ரன்களை கடந்தது. டிவில்லியர்ஸ் 41 பந்துகளிலும், மொயீன் அலி 31 பந்துகளிலும் அரைசதத்தை கடந்து அசத்தினார்கள். அரைசதத்தை எட்டிய அடுத்த ஓவரிலேயே மொயீன் அலி (50 ரன்கள், 32 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) மலிங்கா பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 17.1 ஓவர்களில் 144 ரன்னாக இருந்தது. அடுத்து களம் கண்ட மார்கஸ் ஸ்டோனிஸ் (0) அதே ஓவரில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து அக்‌ஷ்தீப் நாத் களம் இறங்கினார். கடைசி ஓவரில் டிவில்லியர்ஸ் (75 ரன்கள், 51 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), பொல்லார்ட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதே ஓவரில் அக்‌ஷ்தீப் நாத் (2 ரன்), பவான் நெகி (0) ஆகியோர் மலிங்கா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் ஆனார்கள். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டும், பெரேன்டோர்ப், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 28 ரன்னும் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), குயின்டான் டி காக் 40 ரன்னும் (26 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), இஷான் கிஷன் 21 ரன்னும் (9 பந்துகளில் 3 சிக்சருடன்), சூர்யகுமார் யாதவ் 29 ரன்னும் (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), குருணல் பாண்ட்யா 11 ரன்னும் (21 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்னும், பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மும்பை அணி வீரர் மலிங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

8-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 8-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 7-வது தோல்வியாகும். இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.


 #IPL2019 #MIvRCB
Tags:    

Similar News