செய்திகள்

கார்களில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2018-08-23 16:19 GMT   |   Update On 2018-08-23 16:19 GMT
மயிலாடுதுறை அருகே கார்களில் கடத்தி வரப்பட்ட 3,984 மதுபாட்டில்கள்-1,600 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அல்லிவிளாகம் பாலக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 83 அட்டை பெட்டிகளில் 3 ஆயிரத்து 984 மதுபாட்டில்களை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கார் டிரைவர் நன்னிலம் தாலுகா கூத்தனூரை சேர்ந்த வெற்றிவேந்தன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

இதைப்போல மயிலாடுதுறை அருகே கருவி முக்கூட்டில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,600 சாராய பாக்கெட்டுகளை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியை சேர்ந்த சண்முகவேல் (37) என்பவரை கைது செய்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வர பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
Tags:    

Similar News