ஆன்மிகம்
இஸ்லாம்

இனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: அறப்போர் புரிவது

Published On 2020-01-14 04:40 GMT   |   Update On 2020-01-14 04:40 GMT
‘உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவழியில் நீங்களும் அறப்போர்புரியுங்கள், வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறியோரை இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 2:190)
இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘அறப்போர் புரிவது’ குறித்த தகவல்களை காண்போம்.

போரை இஸ்லாம் எந்த இடத்திலும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றதும் இல்லை; போரை தானாக, சுயமாக, விரும்பி துவங்கியதும் இல்லை. அதை ‘புனிதப்போர்’ என்று அறைகூவல் விடுத்ததும் இல்லை.

விலை மதிக்க முடியாத மாண்புமிகு மனித உயிர்களை பறிக்கும் செயல் எப்படி புனிதம் நிறைந்ததாக ஆகும்?. புனிதப்போர் எனும் சொல் குர்ஆனிலும் பயன்படுத்தப்படவில்லை, நபிமொழிகளிலும் உபயோகப்படுத்தப்படவில்லை.

போர்க்களத்தை விரும்பாதே

‘நபி (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாட்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க்களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘எதிரிகளைப் போர்க்களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம், போரின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கும்படி கேளுங்கள். வேறுவழியின்றி போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால், போரின் துன்பங்களைச் சகித்துப் பொறுமையாக இருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு, இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தனை புரிந்தார்கள்’. (அறிவிப்பாளர்: சாலிம் அபுந் நள்ர் (ரஹ்), நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் போரை வலிய வந்து செய்ய விரும்பியது இல்லை. எதிரிகளைப் போர்க் களத்தில் சந்திக்கவும் ஆசைப்படவில்லை. போரின் அழிவுகளிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரும்படி தமது தோழர்களிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறார்கள். போர் என்பதே அழிவுதான் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் தமது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்கிறார்கள். ஒருவேளை போர்தான் முடிவு, அதுதான் தீர்வு என்று வந்து, நம் மீது திணிக்கப்பட்டால் மனங்களால் பொறுமை கொண்டு, வாட்களால் அதை எதிர்கொண்டு துணிந்து நில்லுங்கள். போரில் பட்ட காயங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் சொர்க்கம் அருமருந்தாக அமையும் என்று சில ஆறுதலான வார்த்தை களையும் உதிர்த்திருக்கிறார்கள்.

அறப்போர் புரிவது நாவாலும் முடியாது; மனதாலும் முடியாது. உடல் பலத்தால்தான் முடியும். எனவே அறப்போர் புரிவதை இஸ்லாம் உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக தேர்வு செய்துள்ளது.

போர் என்பதை ஒரு அரசாங்கம்தான் தமது நாட்டின் பாதுகாப்பு கருதி தொடுக்க முடியும். தனிநபரோ, தனிக்குழுவினரோ, தனிஅமைப்போ தொடுக்க முடியாது. இவர்கள் தொடுப்பது போராக கருதமுடியாது. அதை வன்முறையாகத்தான் பாவிக்க முடியும். அறப்போருக்கு இஸ்லாத்தில் இடமுண்டு, வன்முறைக்கு இஸ்லாத்தில் எள் அளவு கூட இடம் கிடையாது.

நற்செயல்களில் சிறந்தது...

அறப்போர் குறித்த நபிமொழிகள் வருமாறு:

“இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே, நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன்.

‘தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது’ என்றார்கள்.

‘பிறகு எது?’ என்று கேட்டேன்.

‘தாய்-தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள்.

‘பிறகு எது?’ என்று கேட்டேன்.

‘இறைவழியில் அறப்போர் புரிவது’ என்று பதில் சொன்னார்கள்.’ (நூல்: புகாரி)

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘இறைவழியில் தன் உயிராலும், தன் பொருளாலும் போராடுபவரே’ என்று பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி)

‘இறை பாதையில் காலை நேரத்தில் சிறிது நேரம், அல்லது மாலை நேரத்தில் சிறிது நேரம் அறப்போர் புரியச் செல்வது; உலகம், அதிலுள்ள பொருட்கள் யாவற்றை விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

‘நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்து வந்த ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே, நான் முதலில் இறைவழியில் அறப்போர் புரிந்து விட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், முதலில் நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு’ என்று கூறினார்கள். எனவே, அவர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இறைவழியில் போரிட்டு, அதில் வீரமரணமும் அடைந்தார். இவர் குறித்து நபி (ஸல்) கூறுகையில்: ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிகளவு நற்பலனைப் பெற்றார்’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: பராஉ (ரலி), நூல்: புகாரி)

இந்த மனிதர் தொழவில்லை; நோன்பு நோற்கவுமில்லை; ஜகாத்தும் வழங்கவில்லை; ஹஜ் செய்யவுமில்லை. நேராக நபியிடம் வந்தார், இஸ்லாத்தை ஏற்றார், அறப்போர் செய்து அதில் வீரமரணமும் அடைந்தார். இந்த இரண்டு செயல்களை மட்டுமே செய்தார். சொர்க்கம் உட்பட அபரிமிதமான பலன்களை அடைந்து விட்டார்.

அறப்போர் குறித்து திருக்குர்ஆன் கூறியிருப்பதாவது:

‘(நபியே!) அறப்போர் புரியம்படி இறை நம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக’. (திருக்குர்ஆன் 8:65)

‘நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி அறப்போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும் மற்றும் உயிர்களாலும் இறைவழியில் அறப்போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் அறப்போரிடுவோருக்கு, அறப்போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். அறப்போருக்குச் செல்லாதோரை விட அறப்போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தமது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். இறைவன் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:95-96)

இப்படிப்பட்ட பலவிதமான உயர் அந்தஸ்து இறைவழியில் அறப்போர் புரிவோருக்கு உண்டு. போரில் அறம் பேணும்படியும், வரம்பு மீறாமல் இருக்கும்படியும் இஸ்லாம் போதிக்கிறது.

‘உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவழியில் நீங்களும் அறப்போர்புரியுங்கள், வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறியோரை இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 2:190)

போரில் வரம்பு மீறுவது என்றால் இஸ்லாம் தடை செய்த செயல்களை யுத்தத்தின் போது செய்வது. அவை: போர்க்களத்தில் எதிரிகளை சித்ரவதை செய்யக்கூடாது. பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், மதகுருமார்களையும், மடாதிபதிகளையும் கொல்லக்கூடாது. மரங்களை வெட்டவோ, எரிக்கவோ கூடாது. தேவையில்லாமல் உயிரினங்களை கொல்லக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் போரில் அறத்தையும், மனித நேயத்தையும் கடைபிடித்தார்கள். மதீனாவில் 10 ஆண்டுகளில் பலவிதமான போர்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. வேறுவழியின்றி அவர்களும் பலவிதமான போர்களை சந்திக்க நேரிட்டது.

அவற்றில் 1) பத்ர் போர், 2) உஹது, 3) அஹ்ஸாப், 4) முரைசீ, 5) தாயிப், 6) கைபர், 7) மக்கா, 8) ஹுனைன், 9) பனூகுரைளா ஆகிய ஒன்பது போர்களில் நபி (ஸல்) அவர்கள் நேரடியாகவே கலந்து கொண்டு அறப்போர் புரிந்திருக்கிறார்கள்.

மீதி பத்து போர்களில் படையை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள். இதுபோக 38 சிறுபடைகளையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 57 போர்களில் இருதரப்பிலும் சேர்ந்து 1018 நபர்கள் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரியவருவது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடத்தியது அறப்போர்தான் என்று நிரூபணமாகிறது.

இஸ்லாமும் போரை விரும்பவில்லை. அவ்வாறு அது திணிக்கப்பட்டால் அதிலும் அறமும், மனித நேயமும், கடைபிடிக்கும்படி வற்புறுத்துகிறது. இனி உலகில் மூன்றாம் உலகப்போர் தேவையில்லை. உலகப் பொறுமைதான் தேவை. அறம் தான் தேவை. மனித நேயம் தான் தேவை. போர் இல்லாத உலகம் மலர வேண்டும். அழிவில்லாத உலகம் அமைய வேண்டும். போர் இல்லாத உலகை படைப்போம். உலக அமைதி பெற்று நலமாக வாழ்வோம். சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் பேணி சமரசமாக வாழ்வோம். புறப்படுவீர், புது உலகை படைக்க.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News