செய்திகள்
தீபாவளி

தீபாவளி நேரத்தில் ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

Published On 2021-10-27 04:33 GMT   |   Update On 2021-10-27 04:33 GMT
தீபாவளி நேரத்தில் ஆபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி? என்று பள்ளி மாணவர்களுக்கு பிரியா ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை:

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்தும், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் ‘பாதுகாப்பான தீபாவளி’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் தமிழ்நாடு தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வேலம்மாள் பள்ளி முதன்மை முதல்வர் கே.எஸ்.பொன்மதி, கல்வி இயக்குனர் ஜெயந்தி ராஜகோபாலன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன், கூடுதல் அதிகாரிகள் கார்த்திகேயன், சூர்யபிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? என்று பிரியா ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வெடித்து காண்பித்தனர். அதேபோல கவனக்குறைவாகவோ, கையில் ஏந்தியபடி பட்டாசு வெடிப்பதோ கூடாது என்று தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பின்னர் தீ விபத்தில் சிக்கிய நபருக்கு முதலுதவி அளித்து மீட்பது, எண்ணெய் தீ விபத்து, குடிசையில் பற்றிய தீ விபத்து என பல்வேறு தீ விபத்துகளின்போது எவ்வாறு துரிதமாக செயல்பட்டு தீயை அணைப்பது உள்ளிட்டவற்றை தீயணைப்பு வீரர்கள் அப்படியே செய்து காண்பித்தனர். அப்போது மாணவர்கள்-ஆசிரியர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இறுதியாக கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வண்ண நீரை குழாய்களில் பீய்ச்சியடித்து மாணவர்களை தீயணைப்பு வீரர்கள் பரவசப்படுத்தினர்.

பின்னர் பேரிடர் நேரத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? என்பது குறித்தும் டோர் ஓபனர், ஹைட்ராலிக் கட்டர், ஹைட்ராலிக் ஸ்பிரடர், ஹைட்ராலிக் ஜெனரேட்டர், ஹைட்ராலிக் காம்பிடூல், கான்கிரீட் கட்டர், ஏர் லிப்டிங் பேக், ஷேக் கேட்சர், பி.ஏ.செட், எலக்ட்ரிக் பவர் ஷா போன்ற நவீன ரக எந்திரங்களை காண்பித்து, அதன் பயன்பாடுகள் குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

தீ விபத்துகள் நடைபெறும் சமயங்களில் தங்களை பாதுகாத்து கொள்வதுடன், உடனடியாக 101 என்ற எண்ணை தொடர்புகொண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரியா ரவிச்சந்திரன் பேசியதாவது:-

தீபாவளி எனும் மகிழ்ச்சி நிறைந்த பண்டிகையை நாம் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். எப்போதுமே பட்டாசு வெடிக்கும்போது அவசரமோ, பதற்றமோ கூடாது. ஏனெனில் சிறு கவனக்குறைவு கூட பெரிய விபத்துகளை, விபரீதங்களை ஏற்படுத்திவிடும். எனவே முழு கவனத்துடனும், பாதுகாப்புடனும் பட்டாசு வெடிக்கலாம்.

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று தமிழகம் முழுவதும் 80 தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் சென்னையில் 30 விபத்துகள் பதிவானது. 29 சிறுவர்கள் பாதிக்கப்பட்டதும் இதில் அடங்கும். தீ விபத்தில்லா
தீபாவளி
யே மகிழ்ச்சியான தீபாவளி. எனவே அரசு வரையறுக்கவுள்ள நேரத்தில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடுங்கள். இந்த ஆண்டு தீ விபத்தில்லா தீபாவளி எனும் நிலை ஏற்பட அனைவரும் தீயணைப்பு துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News