வழிபாடு
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் 12-ந் தேதி நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி

Published On 2022-01-10 08:06 GMT   |   Update On 2022-01-10 08:06 GMT
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ந் தேதி நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் பக்தர்கள் இன்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் திருநெல்வேலி என்று ஊர் பெயர் வருவதற்கு காரணமாக அமைந்த திருவிளையாடல் புராணமான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெறுகிறது. 18-ந்தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார்கள். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். 19-ந் தேதி மதியம் 12 மணிக்கு கோவில் சவுந்தர மண்டபத்தில் நடராஜர் திருநடனம் காட்சி நடைபெறுகிறது. 20-ந் தேதி வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் அடிப்படையில் விழா நிகழ்ச்சிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News