உள்ளூர் செய்திகள்
வாலாஜா நகராட்சி அலுவலகம் எதிரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கிய போது எடுத்த படம்.

தடுப்பூசியால் தான் உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது

Published On 2022-01-12 09:11 GMT   |   Update On 2022-01-12 09:11 GMT
கொரோனா தடுப்பூசியால் தான் உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது என வாலாஜாவில் அமைச்சர் காந்தி பேசினார்.
வாலாஜா:

வாலாஜா நகராட்சி அலுவலகம் எதிரில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக் கொள்ள உடல் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் கூறுகையில்:-

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர்கள் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் ஒரு வாரம் வரையில் வழங்குவார்கள், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், தடுப்பூசியால் தான் தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது என்றார்.

அதன்பிறகு வாலாஜா பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்நோய்த்தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் தயார் படுத்தப்பட்டு வருவதை அமைச்சர் பார்வையிட்டார். 

சுமார் 700 படுக்கைகள் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளங்களில் அமைக்கப்பட்டு வருகிறது, ஒரு அறைக்கு 6 படுக்கைகள் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது, மற்றொரு கட்டிடத்தில் சித்தா மையம் அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் முதற்கட்டமாக அனைத்து வட்டங்களிலும் ஒரு மையம் தயார்படுத்தும் பணிகள் நிறைவடையும், இவைகளில் வாலாஜா கல்லூரியில் 245 படுக்கைகளும், சோளிங்கர் சி.எம்.அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கைகளும், கலவை ஆதிபராசக்தி கலைக்கல்லூரியில் 120 படுக்கைகளும், அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 50 படுக்கைகளும், காவேரிப்பாக்கம் சப்தகிரி பொறியியல் கல்லூரியில் 200 படுக்கைகளும், விளாப்பாக்கம் மகாலட்சுமி கலைக் கல்லூரியில் 200 படுக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. 

தயார் நிலையில் உள்ள மையங்களை அடுத்து தொற்று பாதிப்பைப் பொறுத்து மற்ற மையங்களும் உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு வரப்படும் என தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் போது, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கடரமணன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணன், அவைத் தலைவர் சரவணன், செயலாளர் ரகுராமன், வாலாஜா அக்பர் ஷரிப், செயலாளர் குமார் மேல்விஷாரம் முகமது அயூப், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News