செய்திகள்
கோப்புப்படம்

மணிமுத்தாறு ஊருக்குள் புகுந்த கரடி வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

Published On 2019-09-12 09:26 GMT   |   Update On 2019-09-12 09:26 GMT
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு ஊருக்குள் புகுந்த கரடியை வனத்துறையினர் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, ஏர்மாள்புரம் உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் கரடி, சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றிகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்தும், விளைநிலங்களுக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி ஒன்று ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்துக் கொன்றது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை சார்பில் 2 இடங்களில் கூண்டு வைத்தும் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்றுமாலை 6 மணி அளவில் திடீரென மணிமுத்தாறு ஊருக்குள் கரடி ஒன்று புகுந்தது. அங்குள்ள புறக்காவல் நிலையம் எதிரே சாலையில் அங்கும் இங்கும் ஓடியது. பின்னர் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான தங்கும் விடுதி அருகே உள்ள புங்கை மரத்தில் ஏறி நின்றது.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்பை வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கரடியை விரட்டும் பணியை நள்ளிரவிலும் தொடர்ந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த கரடியை காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். எனினும் அந்த கரடி மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்கும் நிலையில் வனத்துறையினர் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மணிமுத்தாறு ஊருக்குள் புகுந்த கரடி வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டதால் 9 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Tags:    

Similar News