செய்திகள்
மெகபூபா முப்தி

மீண்டும் வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி - மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பதாக புகார்

Published On 2020-12-09 01:07 GMT   |   Update On 2020-12-09 01:07 GMT
வனப்பகுதியில் வசித்துவந்த மக்களை சந்திக்கச் செல்ல முயன்ற தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்துவிட்டதாக மெகபூபா நேற்று குற்றம்சாட்டினார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபிறகு அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 14 மாதங்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம், தான் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக மெகபூபா குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், பட்காம் மாவட்டத்தில் வனப்பகுதியில் வசித்துவந்த மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களை சந்திக்கச் செல்ல முயன்ற தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்துவிட்டதாக மெகபூபா நேற்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் தனது வீட்டுக்குள்ளிருந்து வெளியிட்ட ஒரு வீடியோவில், ‘நான் மக்களைச் சந்திக்க முயலும்போதெல்லாம் என்னை அரசாங்கம் தடுப்புக்காவலில் வைப்பது வழக்கமாகிவிட்டது. அவர்கள் கூறுவதுபோல காஷ்மீரில் இயல்புநிலை நிலவுவது உண்மை என்றால், என்னை தடுத்து வைப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களை கதவை திறக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வீடியோவுக்கு முன்பாக டுவிட்டரில் மெகபூபா வெளியிட்ட செய்தியில், ‘காஷ்மீரில் கேள்வி எழுப்புபவர்களை அடக்கமுறையின் மூலம் ஒடுக்கவே மத்திய அரசாங்கம் விரும்புகிறது’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.
Tags:    

Similar News