செய்திகள்
ஸ்மிருதி இரானி

ராகுல் காந்தியின் கருத்தை இந்திய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் - ஸ்மிருதி இரானி ஆவேசம்

Published On 2019-12-13 10:22 GMT   |   Update On 2019-12-13 10:42 GMT
ரேப் இன் இந்தியா (இந்தியாவில் பாலியல் குற்றங்கள்) என்று ராகுல் காந்தி கூறிய கருத்து அருவருக்கத்தக்கது என பாஜக எம்.பி ஸ்மிருதி இரானி ஆவேசமாக கூறியுள்ளார்.
புதுடெல்லி: 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் நடந்த ஐதராபாத், உன்னாவ் சம்பவங்கள் நாடு   முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என நாடு முழுவதும் பொதுமக்கள்  மற்றும் அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  

பெருகி வரும் பாலியல் குற்றங்களை குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டை உயர்த்தப் போவதாக மோடி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று  நாடு முழுவதும் அதிகரித்து வரும் கற்பழிப்புகளால் ரேப் இன் இந்தியா என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ராகுல்  பேசியிருந்தார். இவரது கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. 

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக பெண் எம்பிக்கள் அமளியில்  ஈடுபட்டனர். இந்நிலையில், ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல் காந்தியை இந்திய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என மத்திய மந்திரி ஸ்மிருதி  இரானி தெரிவித்துள்ளார்.  



பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்மிருதி இரானி, ‘பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதையும்  அவர்களின் வலியையும் ராகுல் காந்தி அரசியலுக்காக பயன்படுத்துகிறார். இந்திய பெண்கள் அவருக்கு பதில் அளிக்க தயாராக  இருக்கிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்ய மற்றவர்களுக்கு அழைப்பு விடுப்பதுபோல் ராகுல் காந்தி பேசியிருப்பது அருவருப்பானது.  இந்த கருத்தை யார் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த கருத்துக்கு இந்திய பெண்கள் ராகுலை மன்னிக்க மாட்டார்கள் என்பதை சோனியா  காந்தி அவருக்கு உணர்த்த வேண்டும். பெண்கள் அவருக்கு பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள்’ என்றார்.
Tags:    

Similar News