செய்திகள்
மாமல்லபுரம் கடலில் குளித்து மகிழ்ந்த பயணிகள்

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2021-07-05 09:44 GMT   |   Update On 2021-07-05 09:44 GMT
சுற்றுலா பயணிகள் வருகையால் 2 மாதங்களுக்கு பிறகு கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.
மாமல்லபுரம்:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மத்திய சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தொல்பொருள் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை மூட அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் கடந்த 2 மாதமாக மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையத்து சுற்றுலாவுக்கான தடை நீக்கப்பட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுகிழமையான நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். ஏராளமான சுற்றுலா வாகனங்களும் வந்ததால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடற்கரையில் பொழுதை கழிக்க ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டனர். பலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். ஆபத்தை உணராமல் சிலர் ஆழ்கடல் பகுதியில் குளித்த போது போலீசார் அவர்களை அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.

கடற்கரை கோவில் ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்து, கண்டுகளித்துவிட்டு சென்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் 2 மாதங்களுக்கு பிறகு கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.
Tags:    

Similar News