செய்திகள்
அசர்பைஜான் அதிபர்

ஆர்மேனியாவுடனான போரை நிறுத்த தயார் - அசர்பைஜான் அதிபர் தகவல்

Published On 2020-11-04 19:48 GMT   |   Update On 2020-11-04 19:48 GMT
ஆர்மேனியாவுடனான போரை நிறுத்த தாங்கள் தயாராக இருப்பதாக அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார்.
பாகு:

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் அமைந்துள்ள நாகோர்னோ காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நிலவுகிறது.

இது 1988-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரையிலான போருக்கு வழிவகுத்தது. இந்த போரின் முடிவில் நாகோர்னோ காராபாக் பிராந்தியம் அசர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டாலும் ஆர்மேனியாவை சேர்ந்த பூர்வகுடிகளே இந்த பிராந்தியத்தை இன்றளவும் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

ஆனாலும் இந்த பிராந்தியம் ஆர்மேனியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அந்த பிராந்தியம் தங்களை தாங்களே தன்னாட்சி அரசாக அறிவித்து கொண்டுள்ளது. இதனால் சர்ச்சைக்குரிய அந்த பிராந்தியத்தை சொந்தமாக்குவது தொடர்பாக அசர்பைஜான், ஆர்மேனியா நாடுகளுக்கிடையில் பிரச்சினை நீடிக்கிறது.

நீண்டகால இந்த எல்லை பிரச்சினை கடந்த செப்டம்பர் 27-ந் தேதி ஆயுத மோதலாக உருவெடுத்தது.

இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் இது ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்தது.

இருநாடுகள் இடையிலான இந்த மோதல் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் சமாதான முயற்சியை முன்னெடுத்தன.

ஆனாலும் இந்த விவகாரத்தில் ரஷியா தலையிட்டு ஏற்படுத்திய 2 சண்டை நிறுத்தங்களும் தோல்வியில் முடிந்தன. அதன்பின்னர் அண்மையில் அமெரிக்காவின் தலையீட்டில் உருவான 3-வது சண்டை நிறுத்தமும் தோல்வி அடைந்தது.

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபடுவதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன. இதனால் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஆர்மேனியாவுடனான போரை நிறுத்த தாங்கள் தயாராக இருப்பதாக அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார். அதேசமயம் இது நடக்க வேண்டுமானால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற ஆர்மேனியா உறுதியளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து கூறியிருப்பதாவது:-

முதலாவதாக இந்த போர் விரைவில் முடிவடையும் என்று நான் நம்புகிறேன். அது மிகவும் சிறந்தது. நான் ஒன்றை தொடர்ந்து கூறி வருகிறேன். அதை இப்போது மீண்டும் சொல்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்க ஆர்மேனியா பிரதமர் ஒப்புக்கொண்டால் இன்றே போரை நிறுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை அவர் அத்தகைய உறுதிப்பாட்டை அளிக்கவில்லை. ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானங்களின்படி ஆர்மேனியா ஆக்கிரமித்துள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நியாயமான மற்றும் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News