செய்திகள்
பிரியங்கா காந்தி

மத்திய அரசின் தடுப்பூசி உத்தி, மோசமான தோல்வி - பிரியங்கா காந்தி

Published On 2021-04-21 19:04 GMT   |   Update On 2021-04-21 19:04 GMT
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீயாக வேகம் எடுத்துள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை கண்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீயாக வேகம் எடுத்துள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நெருக்கடியான தருணத்தில் நாம் அனைவரும் உள்ளுணர்வால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான யோசனைகள் அனைத்தும் அரசியல்மயமாக்கல் என நிராகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உயிரும் முக்கியம்தான். எனவே அரசியலைப் பொருட்படுத்தாமல், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

மத்திய அரசைப்பொறுத்தமட்டில் சிறிய விஷயங்களில் நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு தன்னலமின்றி சேவை செய்த முன்னாள் பிரதமர், கண்ணியத்துடன் தற்போதைய பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு ஒரு மந்திரியை பதில் சொல்ல வைக்கிறார்கள். அதிகமான ஆக்சிஜன் பயன்பாட்டுக்காக மாநிலங்களை மத்திய மந்திரிகள் குற்றம் சுமத்துகிறார்கள். மத்திய அரசின் செய்திக்குறிப்புகள், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநில அரசுகளை குறிவைத்து தாக்குகின்றன. (கொரோனா வைரஸ் தொற்று நிர்வாகம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியதும், அதற்கு சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பதில் அளித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.)



மக்கள் தொடர்பு நடவடிக்கையாக தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு ஆக்கி, தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது.

70 ஆண்டு கால முன்னோக்கு சிந்தனை மிக்க ஆளுகைக்கு நன்றி. அதனால்தான் இந்தியா இன்றைக்கு உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடாக விளங்குகிறது.

மத்திய அரசால் ஜனவரி-மார்ச் மாதங்களில் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய முடிந்திருக்கிறது. மொரீசியஸ், கயானா, நோபாளம் ஆகிய நாடுகளில் தடுப்பூசி போய்ச்சேர்ந்ததை படம் எடுத்து காட்டி மிகப்பெரிய மக்கள் தொடர்பு நடவடிக்கையாக மாற்றிக்காட்டி இருக்கிறது, மத்திய அரசு.

ஆனால் அதே காலகட்டத்தில் இந்திய மக்களுக்கு 3 முதல் 4 கோடி டோஸ் தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன.

மத்திய அரசு எதற்காக உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை தரவில்லை? ஏன் பிரதமர் நாட்டுக்கும் மேலாக தன்னை முன்னிலைப்படுத்துகிறார்? 22 கோடி மக்கள் தொகையைக்கொண்டுள்ள உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தில் 1கோடி தடுப்பூசிகள் தானே போடப்பட்டுள்ளன? மத்திய அரசு தடுப்பூசிக்கு ஆர்டர் செய்வதற்கு முன்பாக வெளிநாட்டு முகமைகள், தங்கள் நாட்டின் மக்கள்தொகையைக் காட்டிலும் இரு மடங்கு இந்திய தடுப்பூசிக்கான ஆர்டர்களை கொடுத்து விட்டன. இந்தியா கடந்த ஜனவரியில் தான் தனது முதல் தடுப்பூசி ஆர்டரை கொடுத்தது.

மோடி அரசிடம் தொலைநோக்கு கொள்கை இல்லாததால், இந்தியா இன்றைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிற நாடாகி இருக்கிறது. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறைபாடுகளை கொண்டுள்ளது. அது பாரபட்சமானது. 18-45 வயதானவர்களுக்கு ஏன் இலவச தடுப்பூசி வழங்க நடவடிக்கை இல்லை? புதிய வகை கொரோனா வைரஸ் இன்னும் கடுமையானவை. இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தடுப்பூசி விலை கட்டுப்பாடு இல்லாமல், இடைத்தரகர்களை அரசு ஏன் அனுமதிக்கிறது?

இந்தியாவில் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை ஒத்திசைவான உத்தி கிடையாது. இது ஒரு மோசமான தோல்வி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News