செய்திகள்
கோப்புப்படம்

உலக நாடுகளின் கல்வியை பாதித்த கொரோனா - உலக வங்கியின் ஆய்வில் தகவல்

Published On 2021-02-28 23:16 GMT   |   Update On 2021-02-28 23:16 GMT
கொரோனாவால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளின் கல்வி வளர்ச்சியை இந்த தொற்று அதிகமாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் பேரிடராக உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது, கொரோனா எனும் பெருந்தொற்று. இந்த ஆட்கொல்லி வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதற்குள் இந்த பெருந்தொற்று உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்கள் மிகப்பெரிது. கொரோனாவுக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், வல்லரசு நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கின்றன. ஏழை நாடுகளை பெரும் வறுமைக்கே இந்த தொற்று இட்டுச்சென்றிருக்கிறது.

இந்த சூழலில் உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகள் குறித்து தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில் கல்வியில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து உலக வங்கியும், யுனெஸ்கோ நிறுவனமும் இணைந்து ஆய்வு நடத்தின.

இதில் அனைத்து மண்டலங்களில் இருந்தும் ஏழை, கீழ்-நடுத்தர, உயர்-நடுத்தர, அதிக வருவாய் கொண்ட நாடுகள் என 29 நாடுகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உலக அளவில் 54 சதவீத பள்ளி, கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய நாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் 65 சதவீத குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்திருக்கின்றன. இதைப்போல 33 சதவீத உயர்ந்த மற்றும் உயர்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளும் மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு இணங்க பள்ளிகளைத் திறப்பதற்கும் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய கூடுதல் செலவு தேவைப்படுகிறது.

ஆனால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் 50 சதவீத நாடுகள் தங்கள் பட்ஜெட் திட்டங்களைக் குறைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.

கொரோனா தொற்றால் பல குடும்பங்களுக்கு பெரிய அளவில் வருமான இழப்பு மற்றும் எதிர்மறை வருமானம் மற்றும் சுகாதார அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமான நாடுகளில் உள்ள குடும்பங்கள், உயர் நடுத்தர மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளை விட மொத்த கல்வி செலவினங்களில் அதிகமான பங்கை வழங்க முனைகின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷியா, இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான கல்விப் பங்குகள் உள்ளன எனவும், எனவே மத்திய அரசு ஒதுக்கிய வரவு செலவுத் திட்டத்தைத் தவிர மற்ற முக்கிய நிதி ஆதாரங்களையும் கொண்டிருக்கக்கூடும் எனவும் உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News