செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார் - நாளை பதவி ஏற்பு

Published On 2018-12-15 06:29 GMT   |   Update On 2018-12-15 06:29 GMT
இலங்கையில் பிரதமர் பதவியை ராஜபக்சே இன்று ராஜினாமா செய்ததையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். #Rajapaksa #RanilWickramasinghe
கொழும்பு:

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரிபால் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தல் தேதியையும் சிறிசேனா அறிவித்தார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சிறிசேனா நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கட்சியால் 2 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ரணில் விக்ரமசிங்கே அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக 3 முறை நடந்த வாக்கெடுப்பிலும் அவர் தோல்வி அடைந்தார். ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்தார்.

இதற்கிடையே ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் தலைமையில் 122 எம்.பி.க்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 3-ந்தேதி விசாரித்த கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை விதித்தது.

இதை எதிர்த்து ராஜபக்சே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடையை நீக்க முடியாது என்று உத்தரவிட்டது.

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.

அதில் குறைந்தபட்சம் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் இலங்கை பாராளுமன்றத்தை சிறிசேனா கலைக்க முடியாது என்று தீர்ப்பு கூறியது.

ராஜபக்சே இலங்கை பிரதமராக செயல்பட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதாலும், பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் என்று உத்தரவிட்டதாலும் அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார். இதை அவரது மகன் நாமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதன்படி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே இன்று ராஜினாமா செய்தார்.



இலங்கை பாராளுமன்றத்தை சிறிசேனா கலைக்க உத்தரவிட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காரணமாக அவர் புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதிய பிரதமரை 17-ந்தேதி நியமிக்க போவதாகவும், ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க போவதில்லை என்றும் சிறிசேனா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நாளை காலை 10.30 மணிக்கு ரணில்விக்ரமசிங்கே 5-வது முறையாக இலங்கை பிரதமராக ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்கிறார். இதை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த எம்.பி.யான ரஜிதசேனரத்னே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ரணில் விக்ரமசிங்கே அதிபர் சிறிசேனாவுடன் பதவியேற்பு குறித்து தொலைபேசியில் ஆலோசனை செய்ததாக தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கே மந்திரிசபையில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

ரணில் விக்ரமசிங்கே மட்டும் நாளை பதவியேற்பார். மந்திரிகள் 17-ந்தேதி பதவி ஏற்பார்கள். 30 பேர் கொண்ட மந்திரிசபை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் கடந்த 50 நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டாலும் முக்கிய அமைச்சக பதவிகளை சிறிசேனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  #Rajapaksa #RanilWickramasinghe
Tags:    

Similar News