ஆன்மிகம்
சிவன்

ஐப்பசி மாத பிரதோஷ விரதத்தின் பலனும் மகிமையும்‬

Published On 2019-10-25 05:10 GMT   |   Update On 2019-10-25 05:10 GMT
பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.
சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும்.

பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும்.

“நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.”
(என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்)

பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?
Tags:    

Similar News