ஆன்மிகம்
நாகர்கோவில் அழகம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

நாகர்கோவிலில் அழகம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2021-02-26 05:39 GMT   |   Update On 2021-02-26 05:39 GMT
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் மாசி பெருந்திருவிழா கடந்த 17-ந் தேதி முதல் நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு தீபாராதனை, சமய சொற்பொழிவு, காலை, இரவு நேரங்களில் வாகன பவனி ஆகியவை நடந்தது.

நேற்று 9-ம் நாள் திருவிழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தடம் பார்க்க எழுருந்தருளினார். காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை தேரோட்டம் நடந்தது. முன்னதாக சுவாமி தேரில் எழுந்தருளியதும் தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தேர் சக்கரத்துக்கு தேங்காய் உடைக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நான்கு ரதவீதிகளிலும் தேர் இழுத்து வரப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து சென்றது. தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தேரோட்டத்தைக் காண வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சமய சொற்பொழிவு நடந்தது. இரவு 10 மணிக்கு தேரடி திடலில் சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தாவர்ண நிகழ்ச்சி நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 10-ம் நாள் திருவிழா நடக்கிறது.மாலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ஆறாட்டுத்துறைக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு வாகன வீதி உலாவும், சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஆறாட்டுத்துறையில் இருந்து மேளதாளங்களுடன் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News