செய்திகள்
கோப்புப்படம்

சபரிமலை கோவிலில் ஊழியருக்கு கொரோனா

Published On 2020-11-26 20:50 GMT   |   Update On 2020-11-26 20:50 GMT
சபரிமலை கோவிலில் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் பக்தர்கள் வர வேண்டும். மேலும், சான்றிதழ் இல்லாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனை கேரள பக்தர்களுக்கு இலவசமாகவும், மற்ற மாநில அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.625 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக ரான்னியில் உள்ள கொரோனா முதல் நிலை சிகிச்சை மையத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சபரிமலை சன்னிதானத்தில் பணி செய்து வந்த தேவஸ்தான ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.

இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அந்த ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் ரான்னியில் உள்ள கொரோனா முதல் நிலை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சன்னிதானத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் சபரிமலையில், சன்னிதானத்திற்கு வெளிப்பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
Tags:    

Similar News