செய்திகள்
பணம் மீட்பு

காஞ்சிபுரம், திருவள்ளூரில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.1¾ கோடி மீட்பு

Published On 2020-09-15 03:08 GMT   |   Update On 2020-09-15 03:08 GMT
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி பெறும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை 5 ஆயிரத்து 912 பேரிடம் இருந்து ரூ.1¾ கோடி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 380 விவசாயிகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் 2 ஆயிரத்து 812 பேருக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதன் மொத்த தொகை ரூ.78 லட்சம் ஆகும். இதில் ரூ. 59 லட்சம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டுவிட்டது. மீதமிருந்த ரூ. 19 லட்சம் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து அரசு கணக்குக்கு உடனடியாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

இந்த மொத்த தொகையும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட வங்கி கணக்குக்கு உடனடியாக மாற்றப்படும். மேலும் முறைகேடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே போல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று கிசான் திட்டம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் எனப்படும் விவசாயி நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 234 பேருக்கு 2 கோடியே 32 லட்சம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய்த்துறை, போலீசார், வேளாண்மைத்துறை இணைந்து எடுத்த நடவடிக்கைகளால் இதுவரை 3 ஆயிரத்து 100 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் திரும்ப பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுதொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைகளை திரும்ப பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News