ஆன்மிகம்
7 மாதங்களுக்கு பிறகு மாட வீதியில் மலையப்பசாமி பவனி வந்ததை படத்தில் காணலாம்.

7 மாதங்களுக்கு பிறகு மாடவீதியில் பவனி வந்த மலையப்பசாமி

Published On 2020-11-03 07:59 GMT   |   Update On 2020-11-03 07:59 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக 7 மாதங்களுக்கு பிறகு திருப்பதியில் உற்சவர் மலையப்பசாமி மாடவீதியில் உலாவந்தார்.
திருப்பதியில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் பக்தர்களுக்கு அனுமதியின்றி தனிமையில் நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு தளர்வுகளுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆகஸ்டு மாதம் முதல் இணையதளம் வாயிலாக கல்யாண உற்சவ சேவை மட்டும் தொடங்கப்பட்டது. இதனை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தரிசித்து வருகிறார்கள். அவர்களின் வீடுகளுக்கே பிரசாதங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்ஜித சேவைகளையும் நவம்பர் 2-வது வாரம் முதல் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்து இணையதள முன்பதிவில் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் பெற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த சேவையில் கலந்துகொள்ள வேண்டும். இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தரிசன அனுமதியில்லை.

தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அதெற்கென தனியாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆர்ஜித பிரம்மோற்சவம், டோலோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் நேற்று முன்தினம் முதல் சோதனை முறையில் தொடங்கப்பட்டது.

அவை முடிந்ததும் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி-பூதேவியுடன் மாடவீதியில் புறப்பாடு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 7 மாதங்களுக்கு பிறகு உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News