ஆன்மிகம்
புதுப்பாளையம் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

புதுப்பாளையம் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

Published On 2021-02-21 08:31 GMT   |   Update On 2021-02-21 08:31 GMT
அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் தேர் செய்யும் பணி சமீபத்தில் முடிந்ததும், தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர்களான அங்கயற்கண்ணி, அகத்தீஸ்வரர் எழுந்தருளினர்.
வெம்பாக்கம் தாலுகா புதுப்பாளையம் கிராமத்தில் அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்ததாகும். இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்குக் கட்டுப்பட்டதாகும். கோவில் தேர் சிதிலமடைந்ததால், 1995-ம் ஆண்டில் இருந்து பிரமோற்சவ விழாவின்போது தேரோட்டம் நடக்காமல், வாகனச் சேவை மட்டுமே நடந்து வந்தது.

கோவில் தேரை சீர் செய்ய வேண்டும், எனக் கிராமமக்கள் சார்பில் அரசுக்கும், எம்.எல்.ஏ.விடமும் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 20.9.2018-ந்தேதி அகத்தீஸ்வரர் கோவில் தேரை புதிய வடிவமைப்பில் செய்ய ஒப்புதல் அளித்து, ரூ.23½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் கிராம மக்களின் பங்களிப்பாக ரூ.60 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மேற்கண்ட நிதியில் தேர் செய்யும் பணி நடந்தது.

தேர் செய்யும் பணி சமீபத்தில் முடிந்ததும், தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர்களான அங்கயற்கண்ணி, அகத்தீஸ்வரர் எழுந்தருளினர்.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரில் எழுந்தருளிய உற்சவர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் கஜேந்திரன், உதவி ஆணையாளர் ராமு, வெம்பாக்கம் ஒன்றிய தலைவர் மாமண்டூர் டி.ராஜி, மாவட்ட துணைச் செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், சி.துரை, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமூலன், கன்னியப்பன், சுரேஷ், நாராயணன், ராஜ்மோகன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News