விளையாட்டு
நாதன் லயன்

சர்ச்சைகளில் சிக்கும் ஆஸி.-இங்கிலாந்து வீரர்கள்: அனல் பறக்குமா ஆஷஸ் தொடர்?

Published On 2021-12-02 16:45 GMT   |   Update On 2021-12-02 16:45 GMT
வரும் ஆஷஸ் தொடரில் நாதன் லயன் சரியாக விளையாடவில்லை எனில் அதுவே அவருக்கு கடைசித் தொடராக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் மிகப் பிரபலமானது. இந்த ஆண்டின் ஆஷஸ் தொடர் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. ஆக்ரோஷம், விறுவிறுப்பு, சர்ச்சைகளுக்கு துளியும் பஞ்சமில்லாத டெஸ்ட் தொடராக ஆஷஸ் டெஸ்ட் பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலிய வீரர் டிம் பைன் களத்துக்கு வெளியே தகாத முறையில் நடந்து கொண்டதற்காக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, பவுலரான பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு பவுலரை கேப்டனாக நியமனம் செய்திருப்பது இதுவே முதல்முறையாகும்.  

அதேபோல், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் அடிக்கடி நிறவெறி மற்றும் மதம் சார்ந்த சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இரு அணிகளும் கடுமையான சர்ச்சைகளுடன் களமிறங்குவதால், 2021-2022 ஆஷஸ் தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், “இரு அணிகள் தரப்பிலும் தவறுகளும், சர்ச்சைகளும் இருக்கின்றன. ஆனாலும், இவையெல்லாவற்றையும் புறந்தள்ளுங்கள். டிசம்பர் 8ம் தேதி போட்டியின் விறுவிறுப்புக்காக காத்திருப்போம். என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஃபார்மில் இல்லை. வேகப்பந்து வீச்சாளரின் தலைமையின் கீழ் நாதன் லயன் எப்படி செயல்பட போகிறார் என தெரியவில்லை. இந்த தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை எனில் அதுவே அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News