ஆன்மிகம்
கள்ளழகர்

கள்ளழகர் கோவிலில் 7-ந்தேதி தைலக்காப்பு உற்சவம்

Published On 2019-10-30 07:38 GMT   |   Update On 2019-10-30 07:38 GMT
கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம் வருகிற 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில், திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதுடன், 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது, ஐப்பசி மாதம் நடைபெறும் தைலக்காப்பு உற்சவம்.

இந்தநிலையில் கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டிற்கான தைலக்காப்பு திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை என 3 நாட்கள் நடைபெற உள்ளது. 7-ந்தேதி அன்று மாலை 6.30 மணிக்கு நவநீத கிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவை நடைபெறும். 8-ந்தேதி மாலை 4 மணிக்கு சீராப்திநாதன் சேவை நடைபெறும்.

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தைலக்காப்பு உற்சவம் 9-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு சுந்தரராஜப்பெருமாள் என்ற கள்ளழகர் உற்சவத்திற்காக தனது இருப்பிடத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு நூபுர கங்கைக்கு செல்கிறார். அழகர்மலை அடிவாரத்தில் இருந்து செல்லும் சாமிக்கு வழியில் உள்ள அனுமார் தீர்த்தம், கருட தீர்த்த எல்லையில் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மலை உச்சியில் உள்ள நூபுர கங்கைக்கு சென்று கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அங்குள்ள மாதவி மண்டபத்தில் மதியம் 2 மணிக்கு தைலக்காப்பு கண்டருளி, பின்னர் நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடுதல் நடைபெறுகிறது. அதன்பிறகு திருமஞ்சனம் நடக்கிறது.

பின்னர் அங்குள்ள அலங்காரமாகி சாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் திருவிழாவையொட்டி அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனையும் நடைபெறும். இதையடுத்து வந்த வழியாக கள்ளழகர் பெருமாள் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News