செய்திகள்
காவலாளியிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

வந்தவாசி அருகே நர்சிங் கல்லூரியில் ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2018-11-04 12:28 GMT   |   Update On 2018-11-04 12:28 GMT
வந்தவாசி அருகே நர்சிங் கல்லூரியில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இரவு காவலாளியாக எழும்பூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (60) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு திடீரென 7 பேர் கொண்ட கும்பல் கல்லூரிக்குள் புகுந்தனர். அவர்கள் குணசேகரனை தாக்கி கட்டிடத்தின் பின் பகுதியில் உள்ள சமையல் அறையில் தள்ளி பூட்டினர்.

பின்னர் அந்த கும்பல் கல்லூரியில் உள்ள அலுவலக அறை பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், லேப்-டாப், கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

இன்று காலை வரை சமையல் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த குணசேகரன் தத்தளித்து கொண்டிருந்தார். அவ்வழியாக மாடு ஓட்டிச்சென்ற பெண்ணை ஜன்னல் வழியாக அழைத்து. தான் அடைக்கப்பட்டு இருந்தது குறித்து கூறினார். இதனையடுத்து அந்த பெண் அறையை திறந்து குணசேகரனை மீட்டார்.

வெளியே வந்த குணசேகரன் கல்லூரி உரிமையாளர் முஜிபுர் ரகுமானுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

டி.எஸ்.பி பொற்செழியன், இன்ஸ்பெக்டர். கவுரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் பணம், லேப்-டாப், கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. திருட வந்த மர்ம கும்பல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி கேமரா பதிவையும் எடுத்து சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்யாறு அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்று விட்டனர். இதே கும்பல் மீண்டும் நர்சிங் கல்லூரியில் கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

Tags:    

Similar News