செய்திகள்
புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது- மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை

Published On 2021-02-23 05:26 GMT   |   Update On 2021-02-23 05:26 GMT
புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி கவர்னர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் கவிழ்ந்தது.

சட்டசபையில் நம்பிக்கை பிரேரணையை முன்மொழிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியும், ஆளும்கட்சியான காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சபையை விட்டு வெளியேறினர். இதனால் சபாநாயகர் சிவகொழுந்து, நம்பிக்கை தீர்மானம் நிறைவேறாததால் அரசு தோல்வியடைந்தது என அறிவித்தார்.

சபையிலிருந்து வெளியேறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் தமிழிசையை சந்தித்து தனது அமைச்சரவையை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார்.

சட்டசபையில் அரசு கவிழ்ந்து விட்டதால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதவியிழந்து விட்டனர். ஆனால் இதன் பின் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இது மரபுப்படியான செயலாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை. சட்டசபை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் அரசு அமைக்க எதிர்கட்சிகள் விரும்பவில்லை.

மேலும், மாற்று அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரினால் ஒட்டு மொத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்.

அதுபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால் புதிய அரசு அமைக்க முடியாது.

கவர்னர் உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததால் சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சட்டசபை செயலர் கவர்னருக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த அறிக்கையை வைத்து கவர்னர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி பரிந்துரை செய்ய உள்ளார்.

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யும். இதன்படி புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும்.

இதனால் கவர்னரின் நேரடி மேற்பார்வையில் புதுவை அரசு நிர்வாகம் மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கும்.

Tags:    

Similar News