செய்திகள்
எச்.ராஜா

தமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி

Published On 2020-09-23 09:02 GMT   |   Update On 2020-09-23 09:02 GMT
70 நாட்களில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு வரவுள்ளது. அதன் மூலமாக தமிழகத்தில் 2 மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

திருப்பூர்:

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் வருவதை தடுக்க இயலாது. விளை பொருட்கள் வணிகம், வர்த்தகம் ஊக்குவித்தல் மற்றும் உதவுதல் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

ஆனால் உள்நாட்டில் விவசாயி தன் விளைபொருளை விருப்பப்பட்ட சந்தைக்கு எடுத்துச் செல்வது என்பதை எதிர்ப்பது ஏன்? இந்த சட்டத்தில் விவசாயிகள் நலனை பாதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை எந்தகால கட்டத்திலும் நீக்கப்படாது என்பதை பிரதமர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுயசார்பு இந்தியா திட்டம் மூலமாக விவசாய உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 1 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சுதந்திர வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கட்டமைப்பு வசதிகளுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தினால் மட்டுமே விவசாயம் வளர முடியும். 9 கோடியே 20 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவே விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இன்னும் 70 நாட்களில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு வரவுள்ளது. அதன் மூலமாக தமிழகத்தில் 2 மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News