ஆன்மிகம்
கொரோனாவால் களை இழந்த நாகூர் தர்கா வெறிச்சோடியது

கொரோனாவால் களை இழந்த நாகூர் தர்கா வெறிச்சோடியது

Published On 2020-08-03 02:59 GMT   |   Update On 2020-08-03 02:59 GMT
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்கா ஆட்கள் நடமாட்டமின்றி களை இழந்து காணப்பட்டது.
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பக்ரீத் பண்டிகை களை இழந்தது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்த தமிழக அரசு தடை விதித்தது. பக்ரீத் பண்டிகை தொழுகையை அவரவர் வீட்டில் நடத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது. அதன்படி நாகூர் பகுதியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே நேற்று பக்ரீத் தொழுகை மேற்கொண்டனர்.

உலக பிரசித்திப்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை நாளில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை மேற்கொள்வார்கள். அப்போது ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்கா ஆட்கள் நடமாட்டமின்றி களை இழந்து காணப்பட்டது. சிலர் தர்கா வெளிப்புறத்தில் நின்று முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை செய்தனர்.

பக்ரீத் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை, விளக்க உரை, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. 
Tags:    

Similar News