செய்திகள்
கனமழை காரணமாக மலம்பட்டியில் வீடு இடிந்து விழுந்தது.

மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் 10 வீடுகள் இடிந்து சேதம்

Published On 2021-11-26 07:55 GMT   |   Update On 2021-11-26 07:55 GMT
சொக்கலிங்கபுரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் சிவன் கோவில் அருகில் உள்ள தெருவில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அவதியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.

இதனால் பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கிறது. சில கண்மாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ந்து விளைச்சல் வரும் சமயத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதமாகி உள்ளன.

மேலும் பல கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனால் தங்கள் வீடுகளை காலி செய்து மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொட்டாம்பட்டி அருகே உள்ளது சொக்கலிங்கபுரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் சிவன் கோவில் அருகில் உள்ள தெருவில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அவதியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் மெஹ்ராஜ் பேகம், அமானுல்லா ஊராட்சி செயலாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல் கொட்டாம்பட்டி யூனியன் கசிராயன் பட்டி அருகே உள்ள அருமன்பட்டி பகுதியிலுள்ள பல கண்மாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதேபோல் மேலூர் அருகே உள்ள மேலவளவு ஊராட்சி பகுதியை சேர்ந்த கண்மாய் நீர் வெளியேறி கிராமத்திற்குள் புகுந்தது.

இதுபற்றி தகவலறிந்த மேலவளவு காவல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்தப்பகுதிகளில் மக்களை மீட்டு அவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடம் மற்றும் நாடக மேடைகளில் தங்க வைத்துள்ளனர்.

அந்தப்பகுதி மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை மேலும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் வழங்கி வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உடனடியாக இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மலம்பட்டி கணேசன் என்பவரின் வீடும், ஒத்தக்கோவில்பட்டியில் அடைக்கண் என்பவரது வீடும் இடிந்து சேதமானது.

இதே போல் கிடாரிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதே போல் திருமங்கலம் மற்றும் பேரையூரில் பெய்த கனமழையால் பேரையூர் ஜவகர் தெருவில் ஞானம்மாள் (70) என்பவரின் வீடு மற்றும் கூடம்மாள் (54) என்பவரது வீடும் இடிந்து சேதமாயின.

உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஜென்னட்மேரி (40) என்பவரின் வீடும் இடிந்து விழுந்தது.

Tags:    

Similar News